ஒன்பதிலிருந்து ஐந்து வரை

எப்படித் திட்டம் இட்டாலும் காலையில் கிளம்புவதென்பது ஒரு ஈராக் அல்லது ஆப்கன் போர்.

அலாரம் அடித்தவுடன் எழும் ஒழுக்கம் எத்தனை வருடம் ஆனாலும் வர மறுக்கிறது. தினமும் ரயிலில் பார்க்கும் இந்தியனின் குடும்பம் மொத்தமும் காலையில் எழுந்தவுடன் குளித்து விடுமாம். நல்ல வேளை அந்த மாதிரி கெட்ட பழக்கம் எனக்கோ, லிண்டாவுக்கோ இல்லை.

லிண்டா இன்று சீக்கிரம் எழுந்து விட்டாள் போலிருக்கிறது. ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்ட பீங்கான் கிண்ணத்தை சின்க்கில் எறிந்து விட்டு, ஆரஞ்சு ஜூசை உறிஞ்சினாள். அவள் பக்கத்தில் சின்னவள் சிரியல் பாரை கடித்துக் கொண்டு தெரிந்தாள்.

” இவளுக்கு டயப்பர் மாத்தி ட்ரஸ் பண்ணிட்டேன். பையனுக்கு நீ மாத்திடு. ” என்று எனக்கு உத்தரவிட்டாள். பொறுப்புகளை பங்கு போடுவதில் கில்லாடி.

” புது வேலை எப்படி இருக்கு மார்க்? ” என்றாள்.

” ஒண்ணும் கஷ்டமில்லை. கம்யூட்டிங்தான் படுத்துது. மெட்ரோ ரயில் பயணம் எனக்குப் புதுசு. போகப் போக பழக்கம் ஆயிடும். ”

சொல்லி விட்டு நகர முயன்ற போது, ” மார்க். ” என்று கூப்பிட்டாள். இப்படி ஒரு மென்மையான குரலில் அவள் கூப்பிடுவது அபூர்வம். இரவில் இப்படிக் கூப்பிட்டால் அதற்கொரு சுகமான அர்த்தமிருக்கிறது. பகலில் கூப்பிட்டால் விவகாரம்.

” நியூஸ் பார்த்தியா மார்க்? பிப்ரவரியில் அமெரிக்கர்களின் வேலையிழப்பு புள்ளி விபரம். 650000. ”

லிண்டா பொதுவாய் ஹாலிவுட் அல்லது தொலைக்காட்சி இழுவைகள் பற்றிய செய்தி மட்டும்தான் பேசுவாள். ஜாப் மார்க்கெட் புள்ளிவிபரம் குறித்து பேசுவது கலவரம் தந்தது.

” உன்னோட வேலை எப்படி போய்ட்டிருக்கு லிண்டா? ”

”’ போன வாரம் 200 பேருக்கு கல்தா. எப்ப வீட்டுக்கு அனுப்புவாங்கன்னு தெரியலை. மார்க், நீ இப்பதானே வேலை தேடினே? மார்க்கெட் எப்படி இருக்கு? ‘

ஒரு சின்ன பில்லிங் வேலைக்கு ஒரு நாளில் இரண்டாயிரம் பேராவது விண்ணப்பிக்கிறார்கள். உண்மை நிலவரம் சொல்லி அவளை பயமுறுத்துவதை விட, ” ஒண்ணும் மோசமில்லை. ” என்பது அவளுக்கு சரியான பதில்.

” வாரக் கடைசியில் பயோடேட்டா தயார் செய்யணும். திங்கட்கிழமையிலிருந்து அப்ளை பண்ணலாம்ன்னு இருக்கேன். வீட்டுக்கடன், கார் கடன், ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இதெல்லாம் நினைச்சா தலை சுத்துது. ” என்றாள் லிண்டா.

” ரொம்ப குழப்பிக்காதே. உனக்கு நிச்சயமா வேலை கிடைக்கும். குட்லக்! ” என்று சொல்லி இதற்கு மேல் இந்த டாபிக்கை வளர்க்க விட வேண்டாம் என்னும் முடிவில் பையனை அள்ளிக் கொண்டு குளியலறை சென்றேன்.

அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் கிளம்பி விட்டோம். வாட்ச்மென் சித்திரக்கதை நாவலை அலுவலக பேகிற்குள் திணித்துக் கொண்டு நான் ரயில் பிடிக்க ஆயத்தமானேன்.

ஒப்பந்தப்படி டே கேர் சென்ட்டரில் குழந்தைகளை காலையில் அவள் விட வேண்டும். மாலையில் நான் கூட்டி வர வேண்டும்.

ரயிலுக்கு கட்டணம் செலுத்த ஸ்மார்ட் ரிப் கார்டு பையில் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டு லிண்டாவுக்கு ஒரு முத்தம் கொடுத்து விடை பெற்றேன். ஸ்டேஷனை தொட ஐந்து நிமிஷ நடைதான்.

உலக வங்கியில் ஒப்பந்தப்பணி பார்க்கும் இந்தியன் குட்மார்னிங் சொல்லி புன்னகைத்தான். ரயிலில் கணிசமாய் சீனர்களும் இருந்தார்கள். தலை நரைத்த மூத்த தலைமுறைகள் ரயிலில் கிடைக்கும் இலவச டேப்ளாய்ட் செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருக்க, நடுத்தரங்கள் ப்ளாக்பெர்ரியையோ ஐஃபோனையோ பெருவிரலால் தடவிக் கொண்டிருந்தன. எப்போதும் போல விவஸ்தையில்லாத சிரிப்பும், அரட்டையுமாய் யுனிவர்சிடி இளசுகள். ஆனால் வயது பேதமின்றி எல்லார் காதிலும் வெள்ளையாய் ஐ பாட் ஒயர் தொங்கியது. வேற்று கிரகத்திலிருந்து ஒரு அந்நியன் திடீரென ரயிலுக்குள் வர நேர்ந்தால் இந்த ஒயர் மனிதர்களின் பிரத்யேக உறுப்பு என்றுதான் நினைத்துக் கொள்வான்.

ஓரிரு நிறுத்தங்கள் தாண்டுவதற்குள் மூச்சுத் திணற கூட்டம் நிரம்பியது. வெள்ளை மாளிகைக்கு இரண்டு தெரு தள்ளிததான் வேலை பார்க்கிறேன். அரை மணி அவஸ்தை.. பாரகட் வெஸ்ட் நிறுத்தத்தில் ரயில் நின்றதும் ஜனத்திரளோடு திரளாக வெளியே வந்தேன்.

அரசு அலுவலகங்கள் சுற்றிச் சுற்றி இருப்பதால் இங்கே எப்போதுமே ஜனக்கூட்டம் நிரம்பி வழியும்.

நாற்பது டிகிரி குளிரில் கூட்டத்தோடு கூட்டமாய் பரபரப்புடன் நடந்து செல்வதும் ஒரு சுகம்தான். நான் ரொம்ப தூரம் நடக்க வேண்டியதில்லை. ஸ்டேஷனுக்கு அருகில் இருப்பது ரொம்ப முக்கியம்.

அந்த சாலையோர பெஞ்ச்சில் பையை கிடத்தி, உள்ளிருந்து எடுத்த அட்டையை எல்லார் கண்ணிலும் படும்படி வைத்தேன்.

‘ உதவும் உள்ளங்களை நன்றியுடன் வரவேற்கும் வேறு வேலையில்லாதவன்! ‘

தடிமனான நாவலை பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். இது வரை எத்தனை டாலர்கள் விழுந்தன என்று தெரியாது. சாயந்தரம்தான் கணக்குப் பார்ப்பேன்.

- சத்யராஜ்குமார்

Sunday, March 15, 2009

   




Sign in  |  Terms  |  Report Abuse  |  Print page  |  Powered by Google Sites