Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

சத்யராஜ்குமார் பற்றி

சத்யராஜ்குமார் உங்கள் சொந்தப் பெயரா, புனைபெயரா?
அம்மா அப்பா வைத்த பெயர்தான். பின்னாளில் சத்யராஜ் என்ற பெயரில் ஒரு நடிகர் பிரபலமடைந்ததாலும், எழுத்தாளர்கள் பலர் குமார் அல்லது குமாரனை பெயரின் பிற்பகுதியில் புனைந்து கொள்ள ஆரம்பித்ததாலும், எழுத்துலகம் வழியாக நண்பர்களைச் சந்திக்கும்போது இந்தக் கேள்வியையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.

எவ்வளவு காலமாய்க் கதை எழுதுகிறீர்கள் ?
என்னுடைய 19 வயதிலிருந்து சுமார் 24 வயது வரை பத்திரிகைகளில் நிறைய எழுதினேன். கடந்த பல வருடங்களாக தீவிரமாய் எழுதுவதில்லை. அவ்வப்போது எழுதும் ஓரிரு படைப்புகளோடு சரி.

எவ்வளவு கதை எழுதியிருப்பீர்கள் ?
சுமார் 200 சிறுகதைகள், சில பெரிய கதைகள்.

எந்தெந்த பத்திரிகைகளில் எழுதியுள்ளீர்கள்?
குமுதம், ஆனந்த விகடன், கல்கி, சாவி, தினமணி கதிர், இதயம், தாய், கலைமகள், அமுதசுரபி, சுபமங்களா, ஜனரஞ்சனி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாய் சொல்லுவதென்றால் ஏறக்குறைய தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களிலும்.

எந்தப் பத்திரிகையில் அதிகமாய் எழுதியிருப்பீர்கள்?
சாவி, குமுதம்.

குமுதமா? ஒரு பக்கக் கதைகளா?
பெரும்பாலும் ஐந்து பக்கக் கதைகளே. கதையின் அளவு முக்கியமே இல்லை. கையாளும் விஷயம்தான் கதையின் கனத்தைத் தீர்மானிக்கிறது. காதல் என்ற தலைப்பில் குமுதத்தில் ஒரு ஒரு பக்கக் கதை எழுதினேன். அதன் பாதிப்பு பல பக்கங்களுக்குத் தொடர்ந்தது என்று படித்தவர்கள் பலர் பாராட்டினார்கள். குற்றம் என்ற தலைப்பில் ஐந்து பக்கங்களில் எழுதின கதை பெரிய நாவல் படித்த உணர்வை ஏற்படுத்தியதாக சொன்னார்கள். சமயம் கிடைக்கிறபோது அவற்றை இங்கே வெளியிடுகிறேன்.

குமுதத்தில் நீங்கள் எப்படிப்பட்ட கதைகள் எழுதினீர்கள்?
இலக்கியத் தரமான கதைகள் எழுதினேனா என்று தெரியாது. ஆனால், தரக் குறைவான கதைகளை நான் எப்போதும் எந்தப் பத்திரிகையிலும் எழுதியதில்லை. எல்லாப் பத்திரிகைகளுக்கும் ஒரே மாதிரிதான் எழுதி அனுப்புவேன். செட் தியரிப்படி குமுதம், விகடன், கல்கி ஆகிய எல்லாப் பத்திரிகைகளுக்குமான ஒரு இன்ட்டர்செக்ஷன் இருக்கிறது. அதற்குள் விழும் கதையாக எழுதினா போதும் என்பது என் அநுபவம். டெயில் எண்ட் ட்விஸ்ட் வகை சிறுகதை வடிவம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆகவே எனக்கு சுவாரஸ்யமாய்ப் படும் விஷயங்களை அந்த வடிவில் சிறுகதையாக்கி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். என்னுடைய எல்லா கதையிலும் ஒரு சின்ன விஷயம் அல்லது சுவாரஸ்யம் அல்லது மாறுபட்ட கோணம் நிச்சயம் இருக்கும் என்று தைரியமாகச் சொல்லுவேன். என்னுடைய பெரும்பாலான கதைகளில் நேரடியாக எதையும் விளக்க முற்படாமல் அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை படிப்பவர்களுக்கு உணர்த்தி விட முயல்கிறேன். அதனாலேயே, ‘ வாசகர்களின் மனதில் எழுதுகிற வித்தை இவருக்குக் கை வந்திருப்பது பெரிய விஷயம் ‘ என்று கல்கி என்னைப் பாராட்டியது.

ஏன் குமுதம்? அங்கே உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?
இவ்வளவு காலமாய் எழுதி வந்தாலும் எனக்கு பத்திரிகை உலகில் பர்சனலாய் யாரையும் தெரியாது. கதை நன்றாக இருந்தால் போதும், வெளியிடுவார்கள் என்று 19 வயதில் நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. குமுதத்தில் எழுதினால் நான் குமுதம் வாங்கிப் படிக்கும் முன்பே பத்து நண்பர்கள் கூப்பிட்டு உன் கதை படிச்சேன், நல்லா இருக்கு அல்லது நல்லா இல்லை என்று சொல்லி விடுவார்கள். அந்த ரீச் எனக்கு செளகரியமாயிருந்தது. அதே சமயம் கல்கி அல்லது விகடனில் எழுதினால் முற்றிலும் வேறுபட்ட நண்பர்களிடமிருந்து பாராட்டு கிடைப்பது வேறு வகை அனுபவம்.

நீங்கள் ஒரு மசாலா எழுத்தாளரா?
படிப்பதற்கு சுவாரஸ்யமாக எழுதுவதை மசாலா என்று நீங்கள் கருதினால், ஆமாம் நான் மசாலா எழுத்தாளர்தான். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். ” நீ ஒரு ஜிகினா எழுத்தாளன். உன்னால் சமுதாயத்துக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. உனக்கு நன்றாய் எழுத வருகிறது. நீ நினைத்தால் இன்னும் நல்ல கதைகளாய்த் தரலாம். ” என்று கொஞ்ச நாள் கழித்து போஸ்ட் கார்டில் ஒருவர் திட்டினார். சுற்றும் முற்றும் பார்த்தபோது, கல்கி-யில் எழுதுபவர்கள் தரமாய் எழுதுபவர்கள் என ஒரு நம்பிக்கை நிலவுவதை உணர்ந்து அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிக்கு ஒரு கதை எழுதி அனுப்பினேன். முதல் பரிசு கிடைத்தது. ஒரு மாசம் கழித்து இன்னொரு கதை கல்கிக்கு அனுப்பினேன். அது கல்கியில் வெளியாகி இலக்கிய சிந்தனை பரிசு கிடைத்தது. ஒரு வருட இடைவெளி விட்டு மறுபடி கல்கி போட்டியில் கலந்து கொண்டேன். இரண்டாம் பரிசு கிடைத்தது. அவைகள் எல்லாமே பிரச்சார நெடி இல்லாத இயல்பான கதைகள். அப்புறம் நண்பர் கனகராஜனுடன் (சத்யராஜ்-கனகராஜ்) இணைந்து (நான் கதைக் கரு சொல்ல, அவர் அதைக் கதையாக எழுதினார்) மறுபடி ஒரு பரிசைக் கல்கியில் பகிர்ந்து கொண்டேன். நண்பர் மீனாட்சி சுந்தரத்துடன் (சத்யம்-சுந்தரம்) இணைந்து மீண்டும் கல்கியில் ஒரு ஆறுதல் பரிசு. கனகராஜனுடன் இணைந்து கலைமகளில் குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு.

சமீபத்தில் உங்கள் கதையைப் படித்த மாதிரி நினைவில்லையே? கடைசியாய் எந்தப் பத்திரிகையில் எழுதினீர்கள்?
கடைசியாய் சில வருடங்கள் முன்பு விகடனில் ஒரு படத்துக்குப் பொருத்தமாய் விஞ்ஞானச் சிறுகதை ஒன்றை எழுதி பரிசு வாங்கினேன். திடீரென நிறைய எழுதுவேன். அப்புறம் காணாமல் போய் விடுவேன். என்னை வளர்க்க முயன்ற சாவி போன்ற பத்திரிகைகளே காணாமல் போனது அதை விடப் பெரிய சோகம். வாழ்க்கை வேறொரு திசையில் இழுத்துக் கொண்டே இருப்பதால் தொடர்ந்து எழுத முடிவதில்லை. தொடர்ந்து எழுதா விட்டால் படிப்பவர்களும் சரி, பத்திரிகைகளும் சரி மறந்து விடுவது இயல்பு.

2010 - இறுதியில் கல்கியிலும், குமுதத்திலும் இரண்டு சிறுகதைகள் எழுதினேன். ராட்சஸம், வெற்றிடம் ஆகிய அக்கதைகள் இத்தளத்தில் உள்ளன. 27 நவம்பர் 2013 குமுதம் இதழில் பெண் வாசனை என்ற சிறுகதை எழுதியுள்ளேன்.

கதைத் தொகுப்பு ஏதேனும் வெளியிட்டுள்ளீர்களா?
அதற்கான முயற்சி எதுவும் செய்யவில்லை. ( ஆனால் என்னுடைய சில கதைகளை என் அனுமதியில்லாமல் யாரோ ஒரு பதிப்பாளர் வெளியிட்டு ஓரிரு புத்தகங்கள் தமிழக அரசு நூலகங்களில் காணக் கிடைக்கிறது. நான் எழுதாத சில கதைகளும் என் பெயரோடு அப்புத்தகத்தி உள்ளன. நண்பர்கள் அட்டைப் படத்தை ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்பினார்கள். இந்த மாதிரிக் கொடுமை எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்குமா? )

திருமகள் நிலையம் பதிப்பகத்தினர் ‘ஒரு விநாடியும் ஒரு யுகமும்’ என்ற தலைப்பில் என் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். இது தவிர, இலக்கிய சிந்தனை அமைப்பின் 25-ம் வருட சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் என்னுடைய கதையும் இடம் பெற்றுள்ளது. இப்புத்தகம் பல கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே நீங்கள் வெளியிடுவதெல்லாம் பத்திரிகைகளில் வெளியான கதைகளா?
தற்போது நான் இருக்கும் அமெரிக்காவை தளமாய் வைத்து எழுதிய கதைகளை துகள்கள் என்ற தலைப்பில் தொகுத்துள்ளேன். தவிர, ஏற்கெனவே பத்திரிகைகளில் வெளி வந்த கதைகளை கொஞ்சம் கொஞ்சமாய் இங்கே வெளியிட முயன்று வருகிறேன்.

வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

Tamil Internet Community-யையும், அதன் அற்புதமான எழுத்தாளர்களையும், அவர்கள் படைப்புகளையும், அங்கே நிலவும் உற்சாகத்தையும், நட்புணர்வையும், புதியவர்களை வரவேற்கும் பாங்கையும் பார்க்க பிரமிப்பாய் இருக்கிறது. மெல்லத் தமிழ் இனி வாழும்.

♦♦♦♦

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com