|
18 ஜூலை 2009
என்னைச் சுற்றி கொழகொழவென ரத்தம்.
நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தேன். வேகமாய் கண்களில் பரவியது இருள். பென்சில்வேனியா தெருவை பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் கடக்க முயலும் போது, தேங்கிக் கிடந்த கார்களுக்கு நடுவே திடீரென முளைத்த மோட்டார்பைக்கை நானும், நடந்து செல்லும் என்னை பைக் ஆசாமியும் பார்த்து அதிர்ச்சியடைந்ததுதான் தெரியும்.
அடிபட்ட நானும், அடித்த அவனும் பெரிய ஓலத்தோடு ரத்தம் சிதற ஆளுக்கொரு திசையில் தெறித்தோம்.
அரை விநாடி தருணத்திற்குள் வலியின் வீரியம் உச்சத்தைத் தொட்டு மூளை மரத்துப் போனது. ''ஆர் யூ ஓக்கே? ஆர் யூ ஓக்கே?'' - என்னைச் சுற்றி கலவலரக் குரல்கள். என் மசமசப்பான பார்வையில் நிறைய வெள்ளை முகங்கள்.
யாரோ 911 அவசர உதவி எண்ணை அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மெக்ஸிக மங்கை கைப்பையி்ல் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை என் உலர்ந்த வாயில் ஊற்ற முயன்றாள். ஆட்டோல போலாம்மா. பஸ்ஸுக்குள்ள எல்லாரும் என் டிங்-டாங்கை நசுக்கறாங்க. ஸார், இவன் என் ஆன்ஸர் பேப்பரை காப்பி அடிக்கிறான் ஸார்! திருட்டு படவா, கட் அடிச்சிட்டு ஷகீலா படமா? மாலு, உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறேன்... என் ஆசையை பூராவும் இந்த லெட்டர்ல கொட்டியிருக்கேன். மச்சான் பிட்ஸ் பிலானில கோல்ட் மெடலிஸ்ட் தெரியுமில்ல. விசா கிடைச்சிருச்சு, அடு்த்த வாரம் அமெரிக்கா. பொண்ணு பேரு ரேகா... பிடிச்சிருக்கா பார்த்து சொல்லு. ரேகா, மாலதிங்கிற பொண்ணுக்கு எட்டாங்கிளாஸ் படிக்கிறப்ப லவ் லெட்டர் குடுத்திருக்கேன்... இன்ஃபாச்சுவேஷன்தான்.
ஏன் இத்தனை காட்சிகள் சட்சட்டென விரிகின்றன. கண்ணுக்கு முன்னே கறுப்பு யுனிபார்ம் அணிந்த வாஷிங்டன் டி.சி போலிஸ்காரர். ''ஆர் யூ ஓக்கே?''
கண்களை முழுசாய் திறக்க முயன்றேன். அவருக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டுமென்று வாயை அசைத்தேன். வார்த்தைகள் எதுவும் வெளியேறவில்லை. கண்கள் மீண்டும் உள்ளே சொருகிக் கொண்டன.
போலிஸ்காரரின் குரல் மட்டும் சன்னமாய் காதில் விழுந்தது. ''சவுத், நார்த் ரெண்டு யூனிட்டிலிருந்தும் ஆம்புலன்ஸ் வந்துட்டிருக்கு. அஞ்சே நிமிஷம். யாரையாச்சும் கூப்பிடணுமா? ஐ கேன் கால்.''
''ரேகா... ரேகா... செவன்... ஓ.... '' - என்னால் நம்பரை முழுசாய் சொல்ல முடியவில்லை. இனி என்னிடம் பேசி பயனில்லை என உணர்ந்து, என் பாக்கெட்டை சோதனையிட்டார். செல்போனில் இருந்த நம்பர்களை அவசரமாய் முயன்று யார் யாருடனோ பேசி, நிமிடத்தில் ரேகாவைப் பிடித்து விட்டார்.
''அய்யோ... ஆண்டவா!'' ரேகாவின் ஓலம் செல்போன் ஸ்பீக்கர் அதிர கேட்டது. போதும். ரேகாவின் குரலை காதார கேட்டாயிற்று. இனி நிம்மதியாய்... என் மனதின் ஒரு பகுதியோடு இன்னொரு பகுதி பதறியடித்துக் கொண்டு மறுத்துப் பேசியது. இல்லை, அதற்குள் இது முடியக் கூடாது. இன்னும் நிறைய மிச்சமிருக்கிறது. நேற்றுப் பார்த்த ஆங்கிலப்படத்தில் அந்த ஹீரோ செய்ததைப் போல இன்னும் ஒரு முறை கூட முடிக்கற்றைகளை நீக்கி ரேகாவின் பிடறியில் முத்தமிட்டதில்லை.
பிய்ந்த சதைகளில் துவங்கிய எரிச்சலும், உடைந்த காலின் நரம்புகளில் தெறித்த வலியும் சிந்தனையை ஒரு திசையில் நிலைக்க விடாமல் அலைக்கழித்தன. கிட்டே நெருங்கிற்று தூரத்தில் ஆரம்பித்த ஆம்புலன்ஸ்களின் சைரன் .
சலைன் வாசம். ஸ்ட்ரெச்சரில் மிதந்தேன். அரைவாசி கண்ணை திறந்த போது நீலத் துணி போர்த்தப்பட்டு பைக்காரன் இன்னொரு ஆம்புலன்சுக்குள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தான். கையை அசைத்து அவன் நர்சிடம் ஏதோ பேசுகிறான்.
''லெட்ஸ் கோ டு ஜார்ஜ் வாஷிங்டன் எமர்ஜென்சி கேர் யூனிட்.'' - போலிஸ்காரரின் குரல் கேட்டது. மீண்டும் சைரன். அதற்கப்புறம் காதுகள் நிசப்தமாயின. இருட்டான ஒரு போர்வை என்னைக் கவ்விக் கொண்டது.
மறுபடி நினைவு வந்த போது மெத்தைக்குள் புதைந்திருந்தேன். கால்களில் பெரிய பாண்டேஜ். சிவந்த விழிகளோடு ரேகா என்னருகில் குனிந்தாள். ''வலி பரவால்லயா? ரெண்டு சர்ஜரி பண்ணிட்டாங்க. எல்லாம் சரியாய்டும்.''
''ரேகா, நான் பிழைப்பேன்னே நினைக்கலை.'' - என் வாயைப் பொத்தி விட்டு, சட்டென உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.
''இப்பதான் நான் தைரியமாயிட்டிருக்கேன். கண்டதையும் பேசி என்னை பலவீனமாக்கிராதிங்க. அந்த போலிஸ்காரர் அலெக்ஸ் இல்லைன்னா நான் மயக்கம் போட்டு பக்கத்து பெட்டில் படுத்துட்டிருப்பேன். எத்தனை பார்ம்ஸ். எத்தனை கேள்விகள். இன்ஷ்யூரன்ஸ் கம்பெனில நான் பேசறது அவனுக்குப் புரியலை. அவன் பேசறது எனக்குப் புரியலை. அலெக்ஸ்தான் கூடவே இருந்து எனக்கு உதவி பண்ணினார். பக்கத்தில்தான் ஸ்டேஷன். என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம உடனே கூப்பிடச் சொன்னார். நீங்க மயக்கமா கிடக்கிறப்ப ரெண்டு முறை வந்து பார்த்துட்டுப் போயிட்டார். இந்தியாவுக்கு பேசினப்போ எல்லாரும் பதறி ஒப்பாரி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு சொந்த பந்தமுண்டா? தனியா என்ன பண்ணப் போறேன்னு... சொந்தக்காரங்க இல்லைன்னா என்ன, நல்ல சிஸ்டம் இருக்கு. அக்கறையா பார்த்துக்கிற கட்டமைப்பு இருக்கு. போலிஸ்காரர் அலெக்ஸ் ஏதோ சொந்த அண்ணன் போல பண்ணின உதவிகளையெல்லாம் சொல்லி அவங்களை சமாதானப்படுத்தினேன்.''
சட்டென நினைவு வந்தவளாய் அந்த வெள்ளை கவரை எடுத்து நீட்டினாள். ''ஒரு கெட் வெல் கார்டு கூட குடுத்துட்டுப் போனார். உங்களுக்கு சுயநினைவு வந்தா மறக்காம தரச் சொன்னார்.''
'விரைவில் குணம் பெறுக!' என்று சொன்ன அட்டையைப் பிரித்த போது ஒரு இளஞ்சிவப்பு காகிதம் கீழே விழுந்தது. "சிவப்பு சிக்னலில் ரோட்டை கடந்திருக்கிறீர்கள். ஜே வாக் குற்றத்துக்காக அபராதம் டாலர் எழுபத்தைந்து.''
-சத்யராஜ்குமார்
18 ஜூலை 2009 |