கடல் கடந்தவன்

27 ஜூலை 2009

அவன் கண்கள் ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.

சாலையோரமாய் இருந்த பேக்கரி அருகே சுவரில் தன்னை முட்டுக் கொடுத்து நின்றிருந்தான். இடது கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் கப்பில் கொஞ்சம் சில்லரைகள். கிழிந்த சர்ட்டிலும், பேன்ட்டிலும் சுரண்டினால் வருமளவுக்கு அழுக்கு. எத்தனை கூட்டத்திலும், யாரையும் பார்த்து விடுமளவுக்கு உயரமாக இருந்தான். கை கால்கள் குச்சி குச்சியாய் இருந்தன. ஒடுங்கின முகத்தில் துவங்கிய மீசையும், தாடியும் நெஞ்சு வரை நீண்டன. எண்ணெய் காணாமல் பழுப்படித்து ஒன்றோடொன்று ஒட்டிக் கிடந்த பரட்டைத் தலைமுடி. பிளந்திருந்த தடிமனான உதடுகளுக்குள் மஞ்சளாய் கறை படிந்த பற்கள். மேலுதட்டையும், கீழுதட்டையும் தொட்டுக் கொண்டு பளபளத்தன ஓரிரு எச்சில் கம்பிகள்.

வளசரவாக்கத்திலிருந்து வாஷிங்டன் டி.சிக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. இங்கே எல்லாமே சரி; இந்த ரோட்டோர ஆசாமியைத் தவிர.

காலையும், மாலையும் ரயில் நிலையம் அருகில் தவிர்க்க இயலாமல் அவனை கடந்து செல்ல வேண்டும். Hungry, Help Out! என்று அட்டையில் எழுதி வைத்துப் பிடித்தபடி அல்லது ஏதாவது இசைக்கருவியை வாசித்தபடி ஆங்காங்கே நிற்கும் இதர பிச்சைக்காரர்களைப் பார்த்தால் இப்படி ஒரு பய உணர்வு தோன்றுவதில்லை. லேசர் கதிர்வீச்சைப் போல் நெஞ்சை ஊடுருவிக் கொண்டு ஈரல் குலை வரை சென்று நடு நடுங்க வைக்கிற பார்வை.

அதில் ஒரு செய்தி அல்லது மிரட்டல் நிச்சயம் இருந்தது. அந்த செய்தி எனக்கு மட்டும்தானா? போவோர் வருவோர் யாரையும் நிறுத்தி எதுவும் பேசுகிறவன் போல தெரியவில்லை. அமைதியாகவே நின்றிருந்தான். ஆனால் அவனைக் கடக்கையிலே லேசாய் அவன் அசைந்தாலே என்னை ஏதோ செய்யப் போகிறான் என்று உள் மனசு மூளைக்கு ஒரு திடுக் நியூரானை அவசரமாய் முடுக்கி விடுகிறது.

அப்படி என்னிடம் என்ன உற்றுப் பார்க்கிறான்? எனது சுத்தமான, மடிப்புக் கலையாத பிராண்டட் உடைகள்? வெள்ளை மாளிகையை அடுத்திருக்கும் ஏதாவது ஒரு அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன் என்று பறை சாற்றிக் கொண்டு கழு்த்தில் மஞசளாய் தொங்கும் ஐ.டி கார்டு பட்டை? முதுகுக்குப் பின்னே மாட்டியிருக்கும் அலுவலக லேப்டாப்? சாலையில் போகையில் திடீரென அலுவலக அழைப்பு வந்தால் தவிர்க்க இயலாமல் எடுத்துப் பேச நேர்கிற பிளாக்பெர்ரி ஃபோன்? பிறந்து வளர்ந்த மண்ணில் இப்படி பிச்சை எடுத்து அலைய விட்டு, அழுக்குப்படாமல் வேலை பார்த்துச் செல்லும் வேற்றுநாட்டுக்காரனே என்ற தகிதகிப்பு?

நான் இரண்டடி கிட்டத்தில் நெருங்கிக் கடக்கையில் அந்த தகிதகிப்பு அவனுக்குள் உச்சத்தை அடைந்து விட்டால் என்னவெல்லாம் நேரும்? ஷூக்குள் வியர்த்தது.

ஓட்டமாய் ஓடி பென்சில்வேனியா அவென்யூவைக் கடந்தேன். சில சமயம் அவன் நகர்ந்து என் பின்னாலே வேகமாய் வருகிற மாதிரியெல்லாம் தோன்றும். செக்யூரிட்டியிடம் பேட்ஜைக் காட்டி விட்டு ஆபிஸ் கட்டிடத்துக்குள் புகுந்து மறைந்த பின்தான் இருதயத்துக்குள் தடதடக்கிற சிவமணி நிற்கும். அப்புறம் இது அமெரிக்கா என்பதே மறந்து போகும்.

இரண்டு பேர் தெலுங்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். சசியின் டெஸ்க்கிலிருந்து ஹிந்திப் பாட்டு கேட்கும்.

இந்தியாவிலிருக்கும் எங்கள் டீம் மேனேஜர் தமிழ் என்பதால் வி.ஓ.ஐ.பி போனில், ''ஹரி, க்ளையண்ட் கிட்டே பேசி எனக்கு வேற டயம் வாங்கிக் குடு.'' என்று தமிழில் நான் படபடத்தேன்.

ஹரி எனக்கு ஒரு வருடம்தான் சீனியர். நன்றாகப் படம் போடுவான். சீக்கிரம் மேனேஜராகி விட்டான்.

''ஏன் இப்படி மூச்சிறைக்குது? குரலெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?''

''காலங்கார்த்தால ஆறு மணிக்கு ரோட்ல கூட்டமே இல்லை. வழியில் ஒரு தாடிக்காரன் என்னையே முறைக்கிறான். எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. ஒன்பது மணிக்கு மாத்தினா ரஷ் ஹவர். கூட்டத்தோட கூட்டமா நடந்து போயிரலாம்.''

சில மவுன விநாடிகள் எடுத்து யோசித்தான் ஹரி. பிறகு தயக்கமாய் சொன்னான். ''இது க்ரிட்டிக்கல் ப்ராஜெக்ட். க்ளையண்ட் ஒத்துக்க மாட்டான். நம்ம ஆபிசிலும் பிரச்சனை பண்ணுவாங்க. நேரமே வந்தாதான் இண்டியன் ஆபிஸோட கொலாபரேட்டிவ்வா வேலை பார்க்க முடியும்.''

''இல்லே ஹரி...''

அவன் என்னைப் பேச விடவில்லை. ''வேற ரோட்டில் வரலாமே?''

''சுத்தி வந்தா லேட் ஆகும் ஹரி. க்ளையண்ட் மேனேஜர் முறைக்கிறான். அஞ்சு மணிக்கு அலார்ம் வெச்சு கிளம்ப வேண்டியதா இருக்கு. இதுக்கு மேல முடியாது. பத்தாதுக்கு மெட்ரோ ரயில் வேற அங்கங்க படுத்துருது.''

''ப்ரோட்டோ டைப் பிராஜெக்ட்தான். மூணே மாசம் பல்லைக் கடிச்சிட்டு சமாளிச்சிரு. சீக்கிரம் முடிஞ்சிரும்.''

மூணே மாசம் என்கிறான். எனக்கு அது மூன்று யுகம் போல பயமுறுத்துகிறது. ஹரி தொடர்ந்தான். ''யு.எஸ்ல சில இடங்களில் நேரம் காலம் தெரியாம எசகு பிசகா மாட்டிகிட்டா என்ன வேணா நடக்கும்ன்னு எனக்கும் தெரியும். நீ எதுக்கும் பாக்கெட்ல ஒரு டாலர் நோட்டு வெச்சிக்கோ. அந்த பிச்சைக்காரன் வழி மறிச்சா அதை நீட்டிடு. வாங்கிட்டு பேசாம போயிருவான்.''

அலட்சிமாய் சொல்லி விட்டு போனை வைத்து விட்டான் ஹரி. இதற்கு மேல் அவனிடம் பேசி பிரயோஜனமில்லை. இந்திய அலுவலகத்துடன் இணைந்தியங்க விடியற்காலையில் வர வைத்து கழுத்தறுக்கிறான் ஹரி. ராத்திரி ஏழு மணி வரை பிடித்து வைத்துக்கொள்ளும் க்ளையண்ட் மேனேஜர் வீடு திரும்புகையில் குலை நடுங்க வைக்கிறான்.

தாடி வைத்த அந்த கறுப்பு பிச்சைக்காரன் மாலையிலும் ஆணியடித்து நிறுத்திய கட்அவுட் மாதிரி அங்கேயே நிற்கிறான். இருட்டி விட்டால் கொஞ்சம் லேட்டானால் தொலைகிறதென்று பதினெட்டாம் தெரு வழியே சுற்றிப் போனால், சொல்லி வைத்தாற்போல் அன்றைக்குப் பார்த்து அந்த பிச்சைக்காரன் தெரு மாறி அங்கே நிற்கிறான். பளபளக்கிற அதே டார்ச் விளக்கு பார்வை.

மனைவி மாலா வந்து கொண்டிருந்த கனவில் இப்போது தினமும் அவன் வருகிறான். அவனை நானோ, என்னை அவனோ துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கி ரத்தம் சிவப்பு சுனாமியாக கொப்பளித்து வழிந்தோடும் கனவுக்கு உடல் அதிர்ந்து ராத்திரி நாலு தடவை விழிப்புத் தட்டுகிறேன். அதன் பின் ப்ரிட்ஜ் தண்ணீரால் உலர்ந்த நாக்கை ஈரமாக்கிக் கொண்டு படுப்பது அன்றாடம் நடக்கிறது.

ஊருக்கு போன் பண்ணினால், ''பார்த்து பத்திரமா இருந்துக்கடா. நேத்திக்கு பார்க்குல யோகாசனம் பண்ணிட்டிருந்த ஒரு இந்தியரை சுட்டுக் கொன்னுட்டாங்களாமே?'' என்று சன் நியூஸ் சொல்லி பயமுறுத்தி விட்டு, ''நீயுண்டு உன்னோட வேலை உண்டுன்னு இரு. அநாவாசியமா அங்கேயும் இங்கேயும் அலையாதே.'' என்று அறிவுரையும் தொடர்கிறார்கள்.

இந்த ப்ராஜெக்ட்டே வேண்டாம் திருப்பி அனுப்பி விடு என்று ஹரியிடம் கேட்கலாமா என அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கிறது. அப்புறம் அது அப்ரைசலின் போது இடிக்கும். ப்ரமோஷன், இன்க்ரிமென்ட் எல்லாமே துண்டு விழும்.

தினசரி இரண்டு தடவை பேன்ட் ஈரமாகாத குறையாக அந்த ரோட்டோர அழுக்கு மனிதனை கடந்து சென்று, மேலும் இரண்டு வாரங்கள் சமாளித்துவிட்டேன்.

அன்றைக்கு போன் பண்ணிய ஹரி, ''வெள்ளிக்கிழமை பெட்டியைக் கட்டிட்டு இந்தியாவுக்கு வந்து சேரு. டிக்கட் போட்டாச்சு.'' என்றான் கம்மிய குரலில்.

''என்னாச்சு ஹரி? ப்ரொட்டோ டைப் இன்னும் முடிக்கலையே?''

''க்ளையண்ட் சைடுல ஃபண்ட் ரிவொக் பண்ணிட்டாங்களாம். இந்த ப்ராஜெக்ட் வேண்டாம்ன்னுட்டாங்க. ப்ச். இதை இந்த வருஷம் ஒரு பெரிய அச்சீவ்மென்ட்டா எதிர்பார்த்துட்டிருந்தேன்.''

''ஸாரி ஹரி.'' என்று சொன்ன என் குரலில் கொஞ்சம் கூட வருத்தமேயில்லை. குலுக்கி விட்டு உடைத்த கோக் பாட்டிலைப் போல் மனசுக்குள் உற்சாகம் பீய்ச்சியடித்தது.

வாரக்கடைசியில் விமானத்தில் மிதந்து, புழுங்கும் சென்னைக்குள் கால் பதித்தேன். ஜெட்லேக் தீர இரண்டு நாள் தூங்கித் தீர்த்து, தரமணியிலிருக்கும் ஆபிசுக்கு பைக்கில் பறந்தேன். வழியில் நாயர் கடை டீயோடுதான் இங்கே நாள் ஆரம்பி்க்கும்.

கடை முன்னால் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியபோது, யாசித்து என்னை நெருங்கிய அழுக்கான கையையும், அந்த கைக்கு சொந்தக்காரனையும் பார்த்து அதிர்ந்து போனேன்.

அதே பரட்டைத் தலை. அதே தாடி மீசை. கிழிந்த ஆடை. ஒடுங்கிய கன்னம். டார்ச் லைட் கண்கள். அவன் எங்கே இங்கே வந்தான்?

''தம்பி எப்ப வந்துது? அமெரிக்கா என்னா சொல்லுது?'' மலையாள வாடையோடு நாயர் கேட்டதும், சட்டென சிந்தனை கலைந்தது.

அந்த கறுப்புப் பிச்சைக்காரன் துளைக்கும் கூர்மையான பார்வையோடு இன்னமும் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் கூகிளில் போட்டுப் பார்த்த கன்வர்ஷன் ரேட் ஞாபகம் வந்தது.

''நாயர், இருபத்தஞ்சு காசு சில்லரை இருக்கா?''

பிச்சைக்காரன் கையில் நாற்பத்தெட்டு ரூபாயையும், நாயர் கொடுத்த சில்லரையையும் வைத்ததும். அவன் மிரண்டு போய் என்னைப் பார்த்தான். வேக வேகமாய் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.

அதையடுத்து கண்களில் நீர் தெறிக்க, குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்த என்னை விநோதமாய்ப் பார்த்தார் நாயர்.■

-சத்யராஜ்குமார்

27 ஜூலை 2009 





Sign in  |  Terms  |  Report Abuse  |  Print page  |  Powered by Google Sites