25 ஆகஸ்ட் 2009
அமெரிக்காவே ஆனாலும் சரி, நான்கு நண்பர்கள் கூடுமிடத்தில் கி்ச்சாமி மாதிரி ஒரே ஒரு அப்பாவியாவது இருப்பான்.
இவ்வளவு பரந்த தேசத்தில் கணவர் மனைவிகளே தாயக்கட்டையை வீசிப் போட்ட மாதிரி கிழக்கும் மேற்குமாய் வீசியெறியப்பட்டு, வாரக்கடைசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, தெய்வ சங்கல்பத்தில் நண்பர்கள் எட்டுப் பேர் வாஷிங்டன் டிசிக்குப் பக்கத்தில் ஒரே ஊரில் மாட்டிக் கொண்டோம்.
வெள்ளிக்கிழமை இரவுகளிலும், சனிக்கிழமை இரவுகளிலும் பஃபல்லோ விங்ஸ் மாதிரி பார் அட்டாச்டு உணவகங்களில் கையில் கோப்பையோடு எங்களைப் பார்க்காவிட்டால் அன்றைக்கு இடியுடன் கூடிய பலத்த மழை நிச்சயம் பெய்யும்.

உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்கள் போரடிக்க ஆரம்பித்தால் ஸ்நூக்கர் க்ளப்களில் நீளக்கழி கொண்டு வர்ண பந்துகளை உருட்டிக்கொண்டே, அரை டிராயர் அம்மணிகள் பரிமாறும் சிக்கன் விங்ஸும், ஸாம் ஆடம்சும் ருசி பார்ப்போம்.
காரோட்ட சோம்பல்படும் சமயங்களில் யாராவது ஒருவர் வீட்டின் பால்கனியில் போர்ட்டபிள் க்ரில் கொண்டு சிக்கனை வறுக்க ஆரம்பித்து, ஞாயிற்றுக்கிழமை சட்டப்படி விற்க மாட்டார்கள் என்பதால் திங்கள் டு சனியில் வாங்கி ஃப்ரிட்ஜுக்குள் வைத்த ட்வெல்வ் பேக் பாட்டில்களை உடைக்க ஆரம்பிப்போம்.
மார்ட்டினி, மார்கரிட்டா போன்ற வோட்கா, ஜின் கலவைகளை சரியான பதத்தில் கலந்து கொடுப்பதில் விபின் கில்லாடி.
உள்ளூர் போரடித்தால் நாலு மணிநேரம் பயணம் செய்து அட்லாண்ட்டிக் சிட்டி கேசினோக்களில் மையம் கொள்ளவும் தயங்க மாட்டோம். சூதாடிக் கொண்டே பருகுவது் தனி இன்பம். ஆக மொத்தம் நாங்கள் எட்டுப் பேரும் கூட வேண்டும். கைகளில் பொன்னிற திரவம் ஆட வேண்டும்.
எங்களில் கிச்சாமி மட்டும் விதிவிலக்கு.
மது அருந்த மாட்டேன் என்று பத்து வயசில் பாட்டிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்.
ஆரம்பத்திலிருந்தே நான் அவனை கண்டு கொள்ளாமல் விட்டாலும் - மூர்த்தியும், கருணாவும் லேசில் விடுவதாயில்லை. கிச்சாமிக்குள் இருந்த விஸ்வாமித்திர தவத்தைக் கலைக்க எல்லா மேனகை உத்திகளும் கையாண்டு பார்த்து விட்டார்கள்.
டயட் கோக் வரைதான் அவனை முன்னேற்ற முடிந்தது.
அவர்களும் மிரட்டிப் பார்த்து விட்டார்கள். ஏளனம் செய்து பார்த்து விட்டார்கள். கிச்சாமி எதற்கும் அசரவில்லை. அத்தனை கிண்டலையும் ஒரு சின்னப் புன்னகையில் தாங்கிக் கொண்டு அவர்கள் முகத்தில் கோக்கை பூசினான்.
முதலில் விபினுக்கு கல்யாணம் ஆனது. தொடர்ந்து கருணா, நான், மூர்த்தி ஆகியோரும் வரிசையாய் லெளகீக வலையில் விழுந்தோம். இந்த கால்கட்டு க்வார்ட்டர் கட் ஆகுமா என்று நான் நினைத்தது தவறு.
மனைவிகளை டபாய்க்கும் கலை ஆண்களுக்கு இயற்கையிலேயே உண்டா இல்லையா என லியோனியிடம் கேட்டால் அடுத்த சுதந்திர தினத்தன்று டிவியில் பட்டிமன்றம் நடத்தி பதி்ல் சொல்லுவார்.
ஜே சி பென்னி துணிக்கடை, ஸாம் அண்ட் ராஜ் நகைக்கடை போன்ற மசால் வடைகளுக்கு பொதுவாக எங்கள் எல்லார் மனைவிகளும் சுலபமாய் மாட்டினார்கள். அவர்கள் ட்யூனிக்குகளை ஆராயும் வேளையில் நாங்கள் பேஸ் பால் ஃபைனல்ஸ் பார்ப்பதாக சொல்லி – பார்களுக்கு எஸ்கேப்.
எங்களை திருத்த முயன்று தோற்ற மனைவிகளிடம் அவ்வப்போது திட்டு வாங்கினாலும், எதுவும் மாறவில்லை. கிச்சாமி உட்பட. அதுதான் பிரச்சனை.
அவ்வப்போது மனைவிமார்கள், ''கிச்சாவை பாருங்க. அவரோட மன உறுதியில் காலே அரைக்கால் பங்கு உங்கள்ல யாருக்காச்சும் இருக்கா?''-என்று அவனோடு கம்பேர் பண்ண ஆரம்பித்ததில் மூர்த்திக்கும், கருணாவுக்கும்தான் ரொம்ப வெறியேறி விட்டது.
''உன்னை கட்டி வெச்சு ஒரு நாள் வாயில் ஊத்தி விடலைன்னா எம் பேரை மாத்திக்கறேண்டா.'' என்று நாலாவது பெக் ரம் உள்ளே போனதும் மேஜையை பொத் பொத்தென்று பெரிதாய் அறைந்து கிச்சாமியைப் பார்த்து சத்தம் போட்டான் கருணா.
கி்சசாமி அதற்கும் கோபமே படாமல், ''ஸ்ஸ் கருணா, என்ன இது கன்ட்டாமினேட்டட் டாஸ்மாக் அடிச்சவன் மாதிரி அசிங்கமா கத்திட்டு... பார்ல வெள்ளைக்காரங்க எல்லாரும் திரும்பிப் பார்க்கிறாங்க பாரு. இதெல்லாம் வீட்ல பார்ட்டி போடுவமே அப்ப வெச்சிக்கலாம். கமான்.''
கைத்தாங்கலாய் கருணாவை காருக்குக் கூட்டிப் போனான் கிச்சாமி என்கிற எங்கள் டெசிக்னேட்டட் டிரைவர்.
ஒரு சுபதினத்தில் கிச்சாமிக்கு கல்யாணம் ஆன போது, இனி இந்த எண்மர் அணி எழுவராகக் குறைந்து விடும் என்று நான் நினைத்தேன். கிச்சாமியையே குறி வைத்து நாங்கள் அடிக்கிற கிண்டலை எந்த மனைவியால் தாங்கிக் கொள்ள முடியும்?
கிச்சாமியின் மனைவியால் முடியும்.
''நீங்கல்லாம் சொல்றது சரிதான். ஒருத்தர் இவ்வளவு அப்பாவியா இருந்தா பொழைக்க முடியாதுங்க.'' என்று எங்கள் அணியில் பேட் பிடித்தாள்.
கிச்சாமியை குடிகாரனாக்கி விடும் ஆட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லையென மூர்த்தி & கருணாவிடம் குரூர மகிழ்ச்சி.
''சோஷியலைசிங் பத்தி நீங்க என்ன நினைக்கறிங்க?'' - என்று மிஸஸ் கிச்சாமியிடம் பேட்டி எடுத்தார்கள்.
''என்னது?''
''எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு குடிகாரங்க மாதிரியா தெரியுது? வாரத்துக்கொரு முறை எங்காவது சந்திக்கிறோம். சந்தோஷமா பல விஷயங்கள் பேசிக்கிறோம். பேசிக்கிறப்ப ரெண்டு பெக், ரெண்டே ரெண்டு பெக் உள்ளே தள்ளறோம். இது தப்புங்களா?''
''அது வந்து.... ''
''ஏய் பிரேமா!' என்று அதட்ட முயன்ற கிச்சாமியை அப்புறப்படுத்தினர்கள்.
''டேய்... நாங்க சிஸ்டர் கிட்டே பேசறப்போ நீ குறுக்கே வரக்கூடாது. சிஸ்டர், வெள்ளைக்காரன் ஆபிஸ்ல டீம் பில்டிங்ன்னு ஒரு மேட்டர் வெச்சிருக்கான். மூணு மாசத்துல ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஹேப்பி ஹவர். கம்பெனி வி.பியிலிருந்து தோலான் துருத்தி வரைக்கும் எல்லாரும் பாருக்கு போய் உற்சாகமா ஒருத்தரோட ஒருத்தர் கலந்து பேசிக்கிற வைபவம். போன மாசம் எச்1பி கிடைச்சு வந்த அம்பிகா எல்லாம் பியர் கேனை கையில் பிடிச்சிகிட்டு குலுங்கிக் குலுங்கி சிரிச்சுப் பேசும்போது, கிச்சாமி கேவலம் ஒரு கோக் டம்ளரோட ஓரமா ஒதுங்கி நின்னுட்டிருந்தா அது யாருக்கு இழுக்கு?''
''இந்த மாதிரி ஆபிஸ் கெட்-டு-கெதர்ஸ்ல பேருக்கு ஒரு சிப் குடிச்சு வையுங்களேன்? குறைஞ்சா போயிருவிங்க?'' பிரேமா அவனைப் பார்த்து கோபமாய்க் கேட்டதும் - ''கேளுங்க சிஸ்டர். நல்லா கேளுங்க.'' என்று உற்சாகமானார்கள் மூர்த்தியும், கருணாவும்.
''பிரேமா, இந்தப் பசங்க உன்னை வெச்சு என்னை ஓட்டப் பார்க்கிறாங்க. நீ கொஞ்சம் சும்மா இரு.''
''பார்ட்டில தண்ணி அடிக்க மாட்டேன்னு பாட்டிக்குப் பண்ணிக் குடுத்த சத்தியம்ங்கிறான் சிஸ்டர். அமெரிக்காவில் ஒரு யூத் பேசுற பேச்சா இது? நீங்க முக்கியமா, பாட்டி முக்கியமா?''
''தொப்புள் தெரிய புடவை கட்டாதேடின்னு என்னை மிரட்டினாளே அந்தப் பாட்டியா?''
மிஸஸ் கிச்சாமி சிவப்பான கண்களோடு பார்த்ததும், தலையை ஆட்டிக் கொண்டே அழும் குரலில் சொன்னான். ''பிரேமா, அப்படி எல்லாம் இல்லவே இல்லை. இந்த கண்றாவி திரவங்கள் எல்லாம் கிட்ட கொண்டு வந்தாலே எனக்கு வாசனை குமட்டிட்டு வருது. என்னோட தொண்டைக்குள்ள ஒரு சொட்டு கூட இறங்காது. அப்படியே வெளிய எடுத்துருவேன்.''
அவனைப் பார்க்கப் பார்க்க மிஸஸ் கிச்சாமிக்கு நுனி மூக்கில் சிவந்து கொண்டே வந்தது. தங்கள் காரியம் முடிந்ததென்று திருப்திகரமாய் அடுத்த பெக் அடிக்க பேஸ்மென்ட்டுக்குப் போனார்கள் மூர்த்தியும், கருணாவும்.
அந்த வாரம் புதன் கிழமை அதிகாலையில் கிச்சாமியிடமிருந்து எனக்கு போன் வந்தது. அவன் குரல் உடைந்து போயிருந்தது. தேம்பித் தேம்பி பேசினான்.
''தயவு செஞ்சு போனை வெச்சிராதேடா... நான் இப்ப ஜெயில்ல இருந்து பேசறேன்.''
நான் திடுக்கிட்டுப் போனேன். ''கிச்சாமி, நீ என்ன சொல்றே?''
''நேத்திக்கு போலிஸ்ல மாட்டினேன். ஒரே ஒரு கால்தான் பண்ணலாம்ன்னாங்க. மூர்த்தியை கூப்பிட்டேன். படுபாவி ராங் நம்பர்ன்னு போனை வெச்சிட்டான். மறுபடியும் இன்னிக்கு ஒரு கால். உன்னைத்தாண்டா நம்பியிருக்கேன். யாராவது லாயர் வெச்சு என்னை ஜாமின்ல வெளிய எடுடா ப்ளீஸ்.''
''உனக்கு என்னடா ஆச்சு கிச்சாமி?''
''சோஷியலைஸ் பண்ணிப் பழகுன்னு பிரேமா நச்சரிச்சு வீட்டில் முந்தாநாள் ராத்திரி மொத தடவையா கொஞ்சமா குடிச்சுத் தொலைச்சேன். கீழ் வீட்டு அமெரிக்கன் அன்னிக்குப் பார்த்து ராத்திரி பன்னண்டு மணிக்கு உதவி கேட்டான். 'டாக்சி வரலை, ஃப்ளைட் மிஸ் ஆகிரும்... ஏர்போர்ட்ல ட்ராப் பண்ண முடியுமா?'ன்னு கெஞ்சினான். நாம என்னிக்கு மறுத்திருக்கோம். அந்த ஆளை ஏர்போர்ட்டில் விட்டுட்டு வர்ற வழியில் காரை நிறுத்திட்டான் போலிஸ். ப்ரீத்திங் டெஸ்ட் எடுத்து ட்ரன்க் அண்ட் ட்ரைவ்ன்னு உள்ளே வெச்சிட்டான்டா.''
கிச்சாமி, ஷாருக்கான் போன்ற அப்பாவிகள் எப்படி கரெக்டாய் மாட்டிக்கொள்கிறார்கள் என்று அத்தனை கவலையிலும் நான் வியந்து போனேன்.■
-சத்யராஜ்குமார்
25 ஆகஸ்ட் 2009
தொடர்புடைய பதிவு: இன்று - Today >> அமெரிக்காவில் கிச்சாமி

